புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கோவில்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன
கரூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கோவில்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரூர்
புதிய கட்டுப்பாடுகள்
கடந்த ஆண்டு உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரசின் தாக்கம் இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. கடந்த 10-ந்தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் நின்று செல்ல அனுமதி கிடையாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
தொடர்ந்து கடந்த 20-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி கரூரில் ஜவகர்பஜார், கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
தியேட்டர்கள் மூடல்
அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. தியேட்டர்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல் ஊழியர்கள் பார்சல் வாங்க வருபவர்களுக்காக தனியாக கவுண்ட்டர்கள் ஒதுக்கி பார்சல் உணவுகளை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர்.
மேலும் கடைகள் முன்பு முன்பு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் பெயிண்டால் வட்டமிடப்பட்டு இருந்தது. சலூன் கடைகள், பியூட்டிபார்லர், ஜிம் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டு இருந்தன. வங்கிகள் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதால், வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அமரும் வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சேர்கள் போடப்பட்டிருந்தன.
கோவில்கள்
இதேபோல் கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் கோவில் வாசல்களில் நின்றபடி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். அதேநேரம் பக்தர்கள் அனுமதியின்றி கோவில்களில் அன்றாட பூஜைகள் மட்டும் நடைபெற்றன.
கரூரில் உள்ள கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், வெண்ணைமலை முருகன் கோவில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவில் உள்பட நகரில் உள்ள பல்வேறு கோவில்களும் மூடப்பட்டன.
மேலும், மறுஉத்தரவு வரும்வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில்களின் முன்பு அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மதுப்பிரியர்கள் திண்டாட்டம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரூரில் உள்ள அனைத்து மது பார்களும் மூடப்பட்டன. இதனால் மது குடிக்க வந்த மதுப்பிரியர்கள் திண்டாட்டம் அடைந்தனர். இதனால் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
குளித்தலை
குளித்தலை பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருந்தன. டீக்கடை மற்றும் ஓட்டல் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். சலூன் கடைகள் எதுவும் செயல்படவில்லை. குளித்தலை பகுதிகளில் வழக்கம்போல அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. மேலும் கொரோனா நோய் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் போலீசார் தவிர மற்றவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. புகார் பெறுதல் மற்றும் புகார் தொடர்பான விசாரணை போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் போலீஸ் நிலையத்திற்கு வெளியிலேயே நடைபெற்றது.