கோவையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10¾ லட்சம் கொள்ளை
கோவையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10¾ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை
கோவையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10¾ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
டாஸ்மாக் கடையில் கொள்ளை
கோவை லாலி ரோடு-தடாகம் சாலை சந்திப்பு அருகே 1,729 எண் கொண்ட டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையின் கண்காணிப்பாளர் வேலுசாமி என்பவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் ஷட்டரின் இரண்டு பக்கமும் போடப்பட்டிருந்த பூட்டை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயர் அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த டாஸ்மாக் கடையின் ஷட்டரை திறந்து பார்த்த போது இரண்டு இரும்பு பெட்டியில் ஒரு பெட்டியை காணவில்லை.
அதில் கடந்த 23 மற்றும் 24-ந் தேதிகளில் வசூலான தொகை ரூ.10 லட்சத்து 72 ஆயிரத்து 270 வைக்கப்பட்டிருந்தது. அதை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் திருட்டு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2 நாள் வசூலான பணம்
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முன்பு 2 நாட்கள் கடையில் விற்பனை அதிகமாக இருந்தது. வழக்கமாக அந்த கடையில் தினமும் ரூ.3 லட்சத்துக்கு தான் மதுபாட்டில்கள் விற்கும்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்று ரூ.5 லட்சத்துக்கு மேல் விற்பனையாகியுள்ளது. மேலும் 24-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை. இதன் காரணமாக 23-ந் தேதி விற்பனையான பணத்தை வங்கியில் செலுத்தாமல் கடையிலேயே வைத்துள்ளனர்.
அதனுடன் 24-ந் தேதி வசூலான தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.10 லட்சத்து 72 ஆயிரத்து 270 ஒரு இரும்பு பெட்டியில் வைத்துள்ளனர்.
ஆனால் அந்த பெட்டியை சிமெண்டு போட்டு பூசாமல் வைத்துள்ளனர்.
இதனால் கொள்ளையர்கள் அதில் பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த பெட்டியை அப்படியே அலேக்காக தூக்கிச் சென்று விட்டனர். மற்றொரு பெட்டி அதிக எடை கொண்டதாக இருந்ததால் அதை அவர்கள் எடுக்கவில்லை.
கைரேகை நிபுணர்கள்
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். அதை பழைய குற்றவாளிகளோடு போலீசார் ஒப்பிட்டு துப்பு துலக்கி வருகிறார்கள்.
முழு ஊரடங்கின்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி கொண்டு மர்ம ஆசாமிகள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.