மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு மாநில அரசு இரவு நேரங்களில் ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதலில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் குவிந்தனர்
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் தலைமையில் மருத்துவர்கள் கார்த்திகேயன், மனோகரன் ஆகியோர் மேற்பார்வையில் செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி போட காலை 7 மணி முதலே பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முண்டியடித்தனர். அவர்களை அங்கு பணியில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தினர்.
ஆனாலும் அவர்கள் முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசி போடும் மையத்துக்குள் செல்ல முயன்றனர். தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களை ஒழுங்குப்படுத்தினர்.
நோய் பரவும் அபாயம்
இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி தடுப்பாடு அச்சம் காரணமாக சிலர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு முதலாவது தடுப்பூசி போட வருகின்றனர்.
இதனால் நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்படும். தற்போது இங்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது.
எனவே தடுப்பூசி போட வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தடுப்பூசி போட்டுச் செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி 200 பேருக்கும், கோவிஷில்டு தடுப்பூசி 130 பேருக்கும் போடப்பட்டது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இதுவரை கோவிஷில்டு தடுப்பூசி 9,616 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசி 2,748 பேருக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 364 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றனர்.