கொரோனா பரவல் அதிகரிப்பு வணிக வளாகங்கள் சலூன் கடைகள் தியேட்டர்கள் மூடப்பட்டன

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக வணிக வளாகங்கள், சலூன் கடைகள், தியேட்டர்கள் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2021-04-26 16:35 GMT
பொள்ளாச்சி

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக வணிக வளாகங்கள், சலூன் கடைகள், தியேட்டர்கள் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பாதிப்பு குறைந்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. 

இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த கடந்த 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழுஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. மேலும் கடைகள் திறந்து இருக்கும் நேரம் குறைக்கப்பட்டது.

தியேட்டர்கள் மூடல் 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறையாததால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி  கோவில்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், நகராட்சி பகுதியில் இயங்கும் சலூன்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. 

இதை தொடர்ந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில்கள் ஆகியவை மூடப்பட்டன.  

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு 

கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். அது போன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இயங்கி வரும் தியேட்டர்கள், சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. மேலும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில்  தியேட்டர்கள் மூடி கிடந்தன. அதேபோல் கிணத்துக்கடவில் உள்ள கோவில்களான சூலக்கல் மாரியம்மன் கோவில், பொன்மலை வேலாயுதசாமி கோவில், சிவலோகநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழக்கம்போல் சாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இதன் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு செய்துவிட்டு திரும்பினார்கள். மேலும் வங்கிகளின் நேரமும் குறைக்கப்பட்டதால், இங்குள்ள வங்கிகளில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

அதுபோன்று ஓட்டல்கள், டீக்கடைகளில் பலர் பார்சல் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்