ஊரடங்கு சோதனையின்போது கொரோனா நோயாளியை கண்டதும் தெறித்து ஓடிய போலீசார்
காரைக்காலில் ஊரடங்கு சோதனையின்போது, கொரோனா நோயாளியை கண்டதும் போலீசார் தெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால்,
புதுவை, காரைக்காலில் கடந்த சில தினங்களாக கொரோனா புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதையொட்டி கொரோனா வைரசை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று 2-வது நாளாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காரைக்காலில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. தமிழகத்தில் இருந்து பஸ்கள் வராததால் காரைக்கால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை காரைக்கால் போக்குவரத்து போலீசார், காரைக்கால் மதகடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனாவசியம் இன்றி வாகனங்களில் வந்த நபர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு போலீசார் அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் தனக்கு கொரோனா உள்ளதாகவும், உணவு வாங்குவதற்கு வீட்டில் யாரும் இல்லாததால் தானே வெளியில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் போலீசார் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அபராதத்தில் இருந்து தப்பித்தோம் என்று அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் சிட்டாக பறந்து விட்டார்.