ஆபாச விளம்பரங்களை வெளியிடும் செல்போன் செயலிகளை முடக்க வேண்டும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை

ஆபாச விளம்பரங்களை வெளியிடும் செல்போன் செயலிகளை முடக்க வேண்டும் என்று நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-04-26 14:11 GMT

தேனி:
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட தலைவர் பாண்டி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் சிலர் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பல செயலிகளில் அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதில் வரும் விளம்பரங்கள் 70 சதவீதம் ஆபாசமாக உள்ளது. குடும்பத்துடன் ஒரு செல்போனில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போது இத்தகைய விளம்பரங்கள் வருவதால் மனம் வேதனையடைகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் செல்போன் பயன்படுத்தும் பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். 
நமது இந்திய தேசம் கலாசார பின்னணி கொண்டது. நமது கலாசாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் செல்போன் செயலிகளை முடக்க வேண்டும். செல்போன் செயலிகளில் திருக்குறள், பகவத்கீதை, திருக்குரான், பைபிள் போன்றவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை விளம்பரமாக வெளியிட்டால் எதிர்காலத்தில் சிறந்த தலைமுறை உருவாகும்” என்று கூறப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்