போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பண மோசடி; 10 பேர் கைது
போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்க பிரஜைகளிடம் பண மோசடி செய்து வந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை அந்தேரி-குர்லா சாலையில் போலியாக கால்சென்டர் வைத்து பண மோசடி செய்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 115 பேரை ேவலைக்கு அமர்த்தி 4 பேர் போலியாக கால் சென்டர் நடத்தி வந்து உள்ளனர்.
இதில் வேலையாட்களுக்கு பயிற்சி அளித்து அமெரிக்க நாட்டு பிரஜைகளை தொடர்பு கொண்டு ஏதேனும் காரணத்தை தெரிவித்து, அவர்களை மிரட்டி ‘கிப்ட் கார்டுகளை’ வாங்கி அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், போலி கால்சென்டர் நடத்தி வந்தது தபேஷ் குப்தர், நசீர் கோரி, கன்ஷியாம் மோதி, முகமது அலி ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 83 ஹார்டு டிஸ்க், 109 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் கால்சென்டர் நடத்துவதற்காக ரூ.4 லட்சத்துக்கு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது.