தீ விபத்தில் 15 நோயாளிகள் பலி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் 2 பேர் கைது

தீ விபத்தில் 15 நோயாளிகள் பலியான சம்பவத்தில் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2021-04-26 13:04 GMT
மும்பை, 

பால்கர் மாவட்டம் விராரில் விஜய் வல்லப் என்ற 4 மாடி தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் ஏ.சி. பெட்டி வெடித்து கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 கொரோனா நோயாளிகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த போது அவசரசிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளை காப்பாற்ற ஒரு ஆஸ்பத்திரி ஊழியர் கூட இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்தநிலையில் விரார் போலீசார் தீ விபத்து தொடர்பாக கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனா். இதில் போலீசார் ஆஸ்பத்திரி தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் திலிப் பாஸ்திமால் ஷா (வயது56), நிர்வாக மேலாண்மை அதிகாரி சைலேஷ் தர்மாதேவ் பாதக் (47) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் 2 பேரும் வசாயில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 2 பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்