வேலூரில் தங்கும் விடுதியில் வால்பாறை நகராட்சி தூய்மை ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை
வேலூரில் தங்கும் விடுதியில் வால்பாறை நகராட்சி தூய்மை ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்
வால்பாறை நகராட்சி ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 46). இவர் கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஜான்சன் கல்லீரல் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கடந்த 23-ந் தேதி வேலூருக்கு வந்தார். வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தங்கும் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அதே சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜான்சன் பரிசோதனை செய்துள்ளார். மீண்டும் அறைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வெளியே வரவில்லை.
அறையின் கதவு 2 நாட்களாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் இதுகுறித்து மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத், தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் தங்கும் விடுதிக்கு சென்றனர். போலீசார் சிறிதுநேரம் அறையின் கதவை தட்டி ஜான்சனை கூப்பிட்டனர். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை.
விஷம் குடித்து தற்கொலை
அதைத்தொடர்ந்து போலீசார் மாற்று சாவி மூலம் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு ஜான்சன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அவரின் உடல் அருகே விஷபாட்டில் கிடந்தது. பின்னர் அந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், எனக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் உயிர் வாழ விரும்பவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நானே பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தார்.
அதையடுத்து அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜான்சன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போடிநாயக்கனூர்பட்டியில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.