ஈரோட்டில் முழு ஊரடங்கையொட்டி முக்கிய சாலைகளில் போலீசார் சோதனை தீவிரம்- அவசியமின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில் முழு ஊரடங்கையொட்டி முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவசியமின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-04-25 22:44 GMT
ஈரோடு
ஈரோட்டில் முழு ஊரடங்கையொட்டி முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவசியமின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட எல்லைகள்
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அவசியமின்றி வெளியே சுற்றி திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அவருடைய உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம், நொய்யல், பவானி லட்சுமி நகர், விஜயமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவசர காரணமின்றி வந்தவர்களை மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் திருப்பி அனுப்பினார்கள். இதேபோல் மாநில எல்லையான பர்கூர், ஆசனூர் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினார்கள். குறிப்பாக சோலார், காளைமாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பெருந்துறை ரோடு கலெக்டர் அலுவலகம், திண்டல், சத்தி ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவசியமின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்