லிபியாவில் இருந்து துபாய் வழியாக மதுரை வந்தவர் கைது

லிபியாவில் இருந்து துபாய் வழியாக மதுரை வந்தவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-04-25 20:27 GMT
மதுரை 
மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சென்னையை சேர்ந்த பிரவின் (வயது 26) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அவர் துபாயிலிருந்து தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான லிபியா சென்று வந்தது தெரியவந்தது. 
முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 2017-ம் ஆண்டு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றிவிட்டு, 2 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019-ல் துபாயில் இருந்து லிபியா சென்றுள்ளார்.  லிபியாவில் இருந்து தற்போது துபாய் வழியாக மதுரை வந்ததால் சந்தேகமடைந்த குடியேற்ற துறை அதிகாரிகள் அவரை பிடித்து பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தடையை மீறி லிபியா சென்று வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
மேலும், அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்