சோகத்தில் மூழ்கிய வள்ளவிளை கிராமம்
நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற 11 குமரி மீனவர்கள் மாயமானதால், வள்ளவிளை கிராமமே சோகத்தில் மூழ்கியது.
கொல்லங்கோடு,
நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற 11 குமரி மீனவர்கள் மாயமானதால், வள்ளவிளை கிராமமே சோகத்தில் மூழ்கியது.
வள்ளவிளை மீனவர்கள்
குமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த கைராசன் மகன் ஜோசப் பிராங்கிளினுக்கு சொந்தமாக விசைப்படகு உள்ளது. அந்த படகில் ஜோசப் பிராங்கிளின், அதே ஊரை சேர்ந்த பிரெடி, ஏசுதாசன், ஜான், சுரேஷ், ஜெபிஷ், விஜீஷ், ஜெனிஸ்டன், ஜெகன், ஷெட்ரிக் ராஜ், மார்பின் ஆகிய 11 பேரும் கடந்த 9-ந்தேதி தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வள்ளவிளை பகுதியை சேர்ந்த பெரியநாயகி விசைப்படகில் சென்றவர்கள் கர்நாடக மாநிலம் கார்வார் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது, அதே ஊரை சேர்ந்த விசைப்படகு கவிழ்ந்து கிடந்ததை பார்த்தனர். உடனே அவர்கள் வள்ளவிளையில் உள்ள ஜோசப் பிராங்கிளின் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
11 மீனவர்கள் மாயம்
அப்போது தான் கவிழ்ந்து கிடந்த படகில் பயணம் செய்த 11 மீனவர்களும் மாயமானது தெரிய வந்தது. அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆழ்கடலில் அந்த பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த குமரி மீனவர்களும் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராேஜஷ்குமார் எம்.எல்.ஏ. வள்ளவிளை கிராமத்துக்கு சென்றார். அங்கு மாயமான மீனவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர், மாயமான 11 மீனவர்களையும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர், மீன்வளத்துறை செயலாளர், மீன்வளத்துறை இயக்குனர், குமரி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கப்பல் விரைந்தது
மாயமான மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பகுதியில் மீன் பிடித்த குமரி மீனவர்கள் 5 படகுகளில் தேடினார்கள். இரவு வரை தேடிய போது படகு மூழ்கிய பகுதியில் இருந்து மீன்பிடிக்க பயன்படுத்தபடும் வலைகள் மற்றும் சேட்டிலைட் கருவிகள் மட்டும் கிடைத்தன. மீனவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் விபத்துக்குள்ளான படகில் இரண்டு வள்ளங்களும் இருந்துள்ளன. அதில் ஒரு வள்ளம் மட்டும் உடைந்து அந்த பகுதியில் கிடக்கிறது என்றும் மற்றொரு வள்ளம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதே போன்று படகு விபத்துக்குள்ளான பகுதி இந்திய பகுதியில் இருந்து வெகு தூரத்தில் உள்ளதால் அந்த இடத்திற்கு கப்பல் மூலம் சென்றாலும் 1½ நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளிடம் வைத்த கோரிக்கையை ஏற்று இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ஒரு கப்பல் மீனவர்களை தேடுவதற்காக சென்று கொண்டிருப்பதாகவும், அந்த கப்பல் இன்று (திங்கட்கிழமை) காலை படகு மூழ்கிய இடத்தை சென்றடையும் என்றும், ஹெலிகாப்டர் உதவியுடன் படகு மூழ்கிய இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் குமரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜித் தெரிவித்தார்.
மேலும் மீனவர்களை தேடும் பணியில் விமானப்படையை சேர்ந்த விமானமும் ஈடுபட்டது.
சோகத்தில் மூழ்கியது
மீனவர்கள் ஆழ்கடலில் மாயமாகி 2 நாட்கள் கடந்த நிலையிலும் அவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் வள்ளவிளை கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.