நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 19½ மணி நேரம் காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்
சொந்த ஊருக்கு செல்ல, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் 19½ மணி நேரம் காத்திருந்து சென்றனர்.
நாகர்கோவில்,
சொந்த ஊருக்கு செல்ல, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் 19½ மணி நேரம் காத்திருந்து சென்றனர்.
வடமாநில தொழிலாளர்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாட்களிலும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் ரெயில் போக்குவரத்து எப்போதும் போல தடையின்றி இயங்கியது.
இதற்கிடைேய கொரோனா பரவி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இதற்காக ரெயில்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில், நேற்று மதியம் 2.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட சாலிமார் சிறப்பு ரெயிலில் பயணம் ெசய்ய ஏராளமான தொழிலாளர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
19½ மணி நேரம் காத்திருந்தனர்
இந்த தொழிலாளர்கள் நேற்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கே நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் இரவு முழுவதும் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கினர். 19½ மணி நேரம் ரெயில் நிலைய வளாகத்தில் காத்திருந்து, மதியம் 2.30 மணிக்கு சாலிமார் ரெயிலில் ஏறி சென்றனர்.
ஒரே சமயத்தில் 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் குவிந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார், அவர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் அணியும் படி அறிவுறுத்தினர்.
முழுஊரடங்கால் நேற்று கடைகள் திறக்காததால் வடமாநில தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் அவதி பட்டனர். அவர்களுக்கு போலீசார் உணவு வழங்கினர். பின்னர் ரெயில் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் ரெயில் நிலையத்திற்குள் சென்று ரெயிலில் சமூக இடைவெளியுடன் வரிசையாக ஏறி சென்றனர்.