நோய் தாக்குதலால் மா விளைச்சல் பாதிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் நோய் தாக்குதலால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் நோய் தாக்குதலால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மாங்காய் சாகுபடி
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், நெடுங்குளம், பிளவக்கல் அணை, பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மாவூத்து ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், குளிர்பானம் தயாரிப்பதற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள் சுவை அதிகமாக இருக்கும்.
நோய் தாக்குதல்
இதனால் பொதுமக்கள் நேரடியாக தோப்பிற்கு சென்று விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்தாண்டு இதற்கு மாறாக மாங்காய் சீசன் தலைகீழாக மாறிவிட்டது. தொடர் மழை மற்றும் மாமரங்களில் பூக்களில் நோய் தாக்குதலால் மா பிஞ்சு எடுப்பதற்கு முன்பாகவே பூக்கள் உதிர்ந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் இன்றி வெற்று மரங்களாக காணப்படுகிறது.
விவசாயிகள் வேதனை
தற்போது மாங்காய்க்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ஆதலால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்ததால் மாமரங்களில் பூக்கள் தாமதமாகவே பூக்க தொடங்கியது.
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் மரங்களில் பூக்கள் அதிக அளவில் பூத்தது. இந்த பூக்கள் வெயிலில் கருகி உதிர்ந்து விடாமல் இருப்பதற்காக மருந்துகளை வாங்கி தெளித்தோம்.
நிவாரணத்தொகை
மா பிஞ்சு காய்க்கும் நேரத்தில் மரங்களில் செல் நோய், தேன் நோய், பூக்களில் புழுக்கள் என மாறி, மாறி நோய் தாக்கியதாலும் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையினாலும் மரத்திலிருந்து பூக்கள் மொத்தமாக உதிர்ந்துவிட்டது.
இதனால் தற்போது பூக்கள் இன்றியும், பிஞ்சு காய்கள் இன்றியும் மரங்கள் காணப்படுகிறது. மீண்டும் பூக்கள் எடுத்து காய் காய்ப்பதற்கு உண்டான வாய்ப்பும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இது போன்று தாங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொைக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.