தாடிக்கொம்பு அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி

தாடிக்கொம்பு அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்துபோனார்.

Update: 2021-04-25 19:08 GMT
தாடிக்கொம்பு:
சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். முன்னாள் ராணுவவீரர். இவரது மகன் லோகேஸ்வரன். இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது பள்ளி நண்பர்களுடன் திண்டுக்கல் என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அங்கு அவரது நண்பர்கள் அனைவரும் கிணற்றில் குளித்து கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் லோகேஸ்வரன் கிணற்றின் அருகில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இதற்கிடையே நீச்சல் பழகுவதற்காக அவர் கிணற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்று நீரில் மூழ்கிய லோகேஸ்வரன் பரிதாபமாக இறந்துபோனார். 
இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார், திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது தீயணைப்பு படைவீரர்கள், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து கிணற்றில் மூழ்கிய மாணவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் லோகேஸ்வரன் உடல் கிடைக்கவில்லை. 
இதையடுத்து கிணற்று நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்ற தீயணைப்பு படையினர் முடிவு செய்தனர். அதன்படி கிணற்று நீரை வெளியேற்றிய பிறகு, லோகேஸ்வரனின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்