வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2021-04-25 17:05 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் நேற்று முழுஊரடங்கை அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தது தவறு. எனவே 3 பேரின் பெயர், முகவரியை தெரிவிக்கும்படி கூறினர். 

அப்போது அவர்களில் ஒருவர், போலீசாரிடம் எனது பெயரை தெரிவிக்க முடியாது.மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தான் பெயரை கூறுவோம். அவர்களை இங்கே வரச்சொல்லுங்கள் என்று கூறி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அந்த வாலிபர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி நடந்து செல்ல முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

 அதனால் அந்த வாலிபர் சத்துவாச்சாரியில் இருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி செல்லும் அணுகுசாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஜீப்பில் வந்தார். அவர் சாலையில் அமர்ந்திருந்த வாலிபரை அழைத்து விசாரித்தார். அப்போதும் அவர் பெயரை தெரிவிக்க மறுத்தார். பின்னர் அவர், கேட்டரிங் படித்துள்ளதாகவும், 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, உடல்தகுதி தேர்வுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

அந்த வாலிபரின் எதிர்கால வாழ்வை கருதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை குறித்து கொண்டனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்