ஒகேனக்கல்லில் சாலையை கடந்த காட்டு யானை
ஒகேனக்கல்லில் காட்டு யானை சாலையை கடந்து சென்றது.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீர், உணவு தேடி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் ராசிகுட்டை, சின்னாறு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தினமும் ஒகேனக்கல்லில் மாலை நேரங்களில் முண்டச்சிபள்ளம் என்ற இடத்தில் ரோட்டை கடந்து செல்கின்றன .இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக காடுகள் பசுமையாக காணப்படுகிறது. மேலும் கனமழையின் காரணமாக சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கூட்டத்தில் இருந்து பிரிந்து உணவு, தண்ணீர் தேடி வந்த ஒரு யானை அங்குள்ள சாலையை கடந்து சென்று குட்டைகளில் தண்ணீர் குடித்து சென்றது.