தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின.

Update: 2021-04-25 12:47 GMT
தேனி:
கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு எதிரொலியாக பஸ் நிலையங்கள், சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
இறைச்சி விற்பனை
தேனியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி விற்பனை கடைகள் செயல்படும். அவை அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தன. சிலர் வீடுகளில் வைத்து இறைச்சி விற்பனை செய்தனர். அதுபோன்ற இடங்களுக்கு காலை நேரத்திலேயே சென்று மக்கள் இறைச்சி வாங்கினர்.
சில இடங்களில் கடைகளை மூடி வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக காலை நேரத்தில் இறைச்சி விற்பனை செய்தனர். மேலும் சிலர் முல்லைப்பெரியாற்றுக்கு சென்று அங்கு மீன் பிடித்துக் கொண்டு இருந்தவர்களிடம் மீன் வாங்கி வந்தனர்.
வாகன தணிக்கை
தேனியில் காலை நேரத்தில் ஊரடங்கு விதிகளை மீறி பொதுமக்கள் சிலர் சாலைகளில் உலா வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாவட்டத்தில் 42 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கை செய்தனர். உரிய அனுமதியின்றியும், அத்தியாவசிய தேவையின்றியும் உலா வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். காலை நேரத்தில் அனுமதியின்றி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சில இடங்களில் ஊரடங்கு விதியை மீறி வெளியில் வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊரடங்கு எதிரொலியாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

மேலும் செய்திகள்