மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் உடல் நசுங்கி பலி - மற்றொரு விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-04-25 11:47 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயி. இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 40). இவர் நேற்று தனது உறவினரான லோகேஷ் குமார் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொண்டு எளாவூர் சந்திப்பில் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்தை கடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற தங்கலட்சுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற லோகேஷ் குமார் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் போலீசார், விபத்தில் உயிரிழந்த தங்கலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல்கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியரான காந்தி (40). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில், கும்மிடிப்பூண்டியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.புதுவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த போது, லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காந்தி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்