மறைமலைநகரில் அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை - கொலையாளியை போலீஸ்காரர் சுட்டு வீழ்த்தினார்
மறைமலைநகரில் அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். வெடிகுண்டு வீசிய நபரை போலீஸ்காரர் சுட்டுக்கொன்றார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கண்ணதாசன் நகர் தெருவை சேர்ந்தவர் திருமாறன் (வயது 50). அ.தி.மு.க. பிரமுகர், தொழில் அதிபரான இவர் ஒரகடம், மறைமலைநகர் உள்பட பல்வேறு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார்.
தொழில் போட்டி காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஒரகடத்தில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் நோக்கி காரில் வரும்போது திருக்கச்சூர் அருகே காரை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்கு முயன்றனர். அப்போது அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதில் குற்றவாளிகள் மேற்கொண்டு வெடிகுண்டு வீசாமல் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து திருமாறனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதனால் அவர் வீட்டில் இருந்து எப்போது வெளியே சென்றாலும் அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் உடன் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் திருமாறனுக்கு நேற்று திருமணநாள் என்பதாலும், சனிபிரதோஷம் என்பதாலும் வீட்டின் அருகே இளவழகனார் தெருவில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமாரசாமி கோவிலுக்கு நேற்று மாலை 6 மணி அளவில் தனது மனைவிஸ்ரீமதியுடன், சாமி கும்பிடுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சென்றார்.
நேற்று சனிப்பிரதோஷம் என்பதால் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்கனவே கோவில் வளாகத்திற்குள் சாமி கும்பிடுவது போல் பொதுமக்களுடன் நின்றுகொண்டிருந்த 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென அவர் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கோவில் வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த திருமாறன் மீது வீசியுள்ளார்.
முதலில் வீசிய குண்டு அவர் மீது சரியாக படவில்லை என்பதால், மீண்டும் ஒரு நாட்டு வெடிகுண்டு எடுத்து அவர் மீது வீசியபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து திருமாறன் பரிதாபமாக இறந்தார்.
கோவில் வளாகத்தில் திருமாறனுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் வெடிகுண்டு வீசிய கொலையாளி மீது 6 முறை துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது மதிக்கத்தக்க கொலையாளி கோவில் வளாகத்திற்குள் ரத்தவெள்ளத்தில் செத்தார். இந்த சம்பவத்தை பார்த்த கோவில் வளாகத்தில் இருந்த பொதுமக்கள், அர்ச்சகர் அனைவரும் கோவிலில் இருந்து நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதனை பற்றி தகவல் அறிந்த காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மறைமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் ஏராளமான போலீசார் வெடிகுண்டு வீசப்பட்ட கோவிலுக்கு சென்றனர்.
கோவில் வளாகத்திற்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த திருமாறன் மற்றும் வாலிபர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் அர்ச்சகரிடம் விசாரணையை தொடங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று மாலை 2 மோட்டார் சைக்கிளில் 4 இளைஞர்கள் செல்வமுத்துக்குமாரசாமி கோவிலுக்கு வந்துள்ளனர். அதில் 3 இளைஞர்கள் கோவில் வெளியே காத்திருந்தனர். ஒரு இளைஞர் மட்டும் கோவில் வளாகத்திற்குள் சென்று அ.தி.மு.க. பிரமுகரை கொல்வதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தார். பின்னர், அவர் வெடிகுண்டு வீசி அ.தி.மு.க. பிரமுகரை கொன்றார். போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுதிருவள்ளூர் மாவட்டம்ஆத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
தப்பி ஓடிய மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த கோவிலில் இருந்த மகாலட்சுமி என்ற பெண் பக்தரும், கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் டிரைவரும் காயம் அடைந்தனர்.
இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.