முழு ஊரடங்கு: சென்னையில், அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும் கூடுதலாக உணவு தயாரிக்கவும் திட்டம்

முழு ஊரடங்கு என்றாலும், சென்னையில் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போலவே செயல்படுகிறது. கூடுதலாக உணவு தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

Update: 2021-04-25 00:10 GMT
சென்னை, 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் ஏழை-எளியோர் வயிற்று பசியை ஆற்றியதில் பெரும்பங்கு அம்மா உணவகங்களுக்கு உண்டு என்றால் அது மிகையல்ல. அந்த சமயங்களில் ஏழை மக்களுக்கு அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக வழங்கப்பட்டது. கூலித்தொழில் யாவும் முடங்கிய நிலையில் சாலையோரம் வசிப்பவர்கள் உள்பட ஏழை மக்களுக்கு மனமும், வயிறும் குளிரும் வகையில் அன்னதான சாலையாகவே அம்மா உணவகங்கள் மாறி போனது.

முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட சமயம் மீண்டும் மலிவான விலை கொண்டு வரப்பட்டது. அதன்படி காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவு சப்பாத்தி என உணவுகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் தற்போது கொரோனா 2-வது அலை தீவிரம் காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னையில் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போலவே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் முனைப்பாக இருக்கிறது. மேலும் ஊரடங்கின்போது சாலையோர கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள் மூடப்படும் என்பதால் ஏழை மக்கள் அம்மா உணவகங்களை அதிகம் நாடுவார்கள். இதனால் அம்மா உணவகங்களில் இன்று கூடுதல் உணவுகள் தயார் செய்யவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் இன்று வழக்கம்போலவே செயல்படும். மக்களின் தேவை கருதி உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதால், கூடுதலாக உணவு தயாரிக்கவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பொதுமக்கள் முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி அம்மா உணவகங்கள் வழக்கம்போலவே இயங்கும்’’, என்றார்.

முழு ஊரடங்கு எனும் இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களின் நலனுக்காக அம்மா உணவகங்கள் செயல்படுகிறது எனும் அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்