பிலிக்கல்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் 9 மயில்கள் செத்து கிடந்தன வனத்துறையினர் விசாரணை

பிலிக்கல்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் 9 மயில்கள் செத்து கிடந்தன வனத்துறையினர் விசாரணை.

Update: 2021-04-24 22:57 GMT
பரமத்திவேலூர்,

பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூரில் பிரசித்தி பெற்ற விஜயகிரி பழனியாண்டவர் கோவில் உள்ளது. காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் மயில்கள் கூட்டம் கூட்டமாக இங்கு அதிகளவில் வருகின்றன. கோவிலின் எதிர்புறம் கொளக்காட்டுபுதூரைச் சேர்ந்த அம்மையப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் தோட்டத்தில் கரும்பு பயிர்களுக்கு நடுவே 6 பெண் மயில்களும், 3 ஆண் மயில்களும் செத்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கும், நாமக்கல்லில் உள்ள வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் வனத்துறையினர் செத்து கிடந்த 9 மயில்களையும் கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மலையம்மாள் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த 10 கோழிகள் மற்றும் சதீஷ்குமார் என்பவரின் 4 கட்டு சேவல்களும் செத்து கிடந்தன. தோட்டத்தில் கரும்பு பயிரில் மருந்துடன் கலந்த அரிசியை தின்றதால்தான் மயில்களும், கோழிகளும் செத்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்