மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதல்; வாலிபர் உள்பட 2 பேர் பலி
கல்லங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதிக்கொண்டதில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வி.கைகாட்டி:
அர்ச்சகர்
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமம் ெதப்பக்குள தெருவை சேர்ந்தவர் ராஜூ(வயது 56). இவர் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஊழியராக (பட்சகர்) வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜேஷ்(23). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் உள்ள பழுதுபார்க்கும் பட்டறையில் இருந்து தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு, கல்லங்குறிச்சி நோக்கி ராஜூ வந்து கொண்டிருந்தார்.
சாவு
அப்போது கல்லங்குறிச்சியில் இருந்து அரியலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் சென்றார். கல்லங்குறிச்சி- அரியலூர் இடையே உள்ள குறைதீர்க்கும் குமரன் ஆலயம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.