ஓமலூர் சக்கரைசெட்டிப்பட்டியில் தண்டவாளம் அருகே மனித எலும்புக்கூடு

தண்டவாளம் அருகே மனித எலும்புக்கூடு

Update: 2021-04-24 21:55 GMT
ஓமலூர்:
ஓமலூர் அருகே சக்கரைசெட்டிப்பட்டியில் தண்டவாளம் அருகே மனித எலும்புக்கூடு கிடந்தது. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மனித எலும்புக்கூடு
ஓமலூர் அருகே சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சி நாலுகால் பாலம் பகுதியில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில்வே தண்டவாளம் அருகே மனித எலும்புக்கூடு கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எலும்புக்கூடுகளை பார்வையிட்டனர். மேலும் அங்கு ஒரு பாலித்தீன் பையும், சாக்கு பையும் கிடந்தது. இதனால் கொலை செய்யப்பட்ட நபரை பாலித்தீன் பை அல்லது சாக்குப்பையில் கட்டி கொண்டு வந்து போட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி, ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் பீதி
எலும்புக்கூடு கிடந்த இடத்தில் கோழிக்கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி இருந்தாலும் பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கடந்த மாதம் ஓமலூரை அடுத்த கருப்பூர் பகுதியில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.  போலீஸ் விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்ததுடன், போலீசார் கொலையாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சி குரமச்சிகரடு தடுப்பணை  பகுதியில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரெயில்வே  தண்டவாளம் அருகே எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமலூர் பகுதியில் அடுத்தடுத்து மனித எலும்புக்கூடுகள் கிடப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்