ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி நீக்கம்
அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி நீக்கம்
சேலம்:
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திலீப்குமார் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வேறு ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.
இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை தமிழாசிரியை ஒருவர், தேவூர் அரசு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். இவர், திலீப்குமாரின் வீட்டின் மேல் மாடியில் தனியாக வாடகைக்கு வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திலீப்குமாரின் மகன், மகள்கள் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் அவர்களை பார்க்க திலீப்குமாரின் மனைவி அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.
இந்த நிலையில் திலீப்குமாருக்கும், அவரது மேல் வீட்டில் வசித்து வந்த ஆசிரியைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திலீப்குமாரிடம் அந்த பெண் ஆசிரியை வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் திருமணத்திற்கு அவர் மறுத்து விட்டார்.
பணி நீக்கம்
இந்த விவகாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், ஆசிரியையிடம் சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி அதன் அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திலீப்குமார் மற்றும் அந்த ஆசிரியை ஆகிய 2 பேரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியிடம் கேட்டபோது, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர், ஆசிரியை ஆகியோர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.