தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த சனிப்பிரதோஷம்

கொரோனா எதிரொலியால், தஞ்சை பெரியகோவில் மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் இன்றி நேற்று சனிப்பிரதோஷம் எளிமையாக நடந்தது. 13-வது முறையாக இந்த பிரதோஷம் பக்தர்கள் இன்றி நேற்று நடந்தது.

Update: 2021-04-24 20:59 GMT
தஞ்சாவூர்;
கொரோனா எதிரொலியால், தஞ்சை பெரியகோவில் மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் இன்றி நேற்று சனிப்பிரதோஷம் எளிமையாக நடந்தது. 13-வது முறையாக இந்த பிரதோஷம் பக்தர்கள் இன்றி நேற்று நடந்தது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருவதில்லை. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம்இலை, மஞ்சள், சந்தனம், தயிர் ஆகிய மங்கல பொருள்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் சனிப்பிரதோஷத்தன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பக்தர்கள் இன்றி பிரதோஷம்
இந்நிலையில், கொரோனா எதிரொலியாக, கடந்த 16-ந்தேதி பெரியகோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல நடந்து வருகிறது. இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், சனிப் பிரதோஷமான நேற்று பக்தர்கள் இன்றி நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு சிவச்சாரியார்கள் மட்டுமே பிரதோஷ வழிபாட்டை நடத்தினர்.
பிரதோஷத்தின் போது பக்தர்கள் இன்றி பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது. தற்போது 13-வது முறையாக பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்