நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேக விழா
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
நெல்லை:
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் வருசாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான வருசாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக அம்பாள் சன்னதியில் 1,008 சங்காபிஷேகமும், சுவாமி சன்னதியில் 108 கலசம் வைத்தும் வழிபாடு மற்றும் சிறப்பு ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி, அம்பாள், நெல்லை கோவிந்தா், ஆறுமுக நயினார், குபேரலிங்கம் உள்பட பல்வேறு சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், ஆறுமுக நயினார், மூல மகாலிங்கம் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விமானங்களுக்கு வருசாபிசேகமும் நடந்தது.
தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி- அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.