குமரி மார்க்கெட்டுகளில் மக்கள்கூட்டம் அலைமோதியது

இன்று முழு ஊரடங்கையொட்டி குமரி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன், கருவாடு வாங்கவும் திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-24 19:56 GMT
நாகர்கோவில், 
இன்று முழு ஊரடங்கையொட்டி குமரி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன், கருவாடு வாங்கவும் திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவல் 
தமிழகத்தில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்திலும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படாது.
அதே சமயம் அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்து விற்பனை செய்யும் கடைகள், ஆம்புலன்சு சேவைகள் போன்றவை வழக்கம் போல இயங்கும். ஓட்டல்களில் பார்சல் உணவுகள் வழங்கப்படும்.
பொருட்கள் வாங்க... 
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நேற்று மாலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் காய்கறி சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலை பொறுத்த வரையில் வடசேரி காய்கறி சந்தையிலும், மீன் சந்தையிலும் கூட்டம் அலை மோதியது.கோட்டார் மார்க்கெட்டில் இருந்து  வெளியூர்களுக்கு அதிகளவிலான லோடுகள் நேற்று ஏற்றப்பட்டன. மேலும் பல ஊர்களில் இருந்து சரக்குகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்தது. மேலும் இன்றைய சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களையும் நேற்றே பொதுமக்கள் வாங்கி வைத்துக்கொண்டனர்.
இறைச்சி கடைகள் 
குமரி மாவட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் உண்பதை வாடிக்கையாக கொண்டவர்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் நேற்று மாலையிலேயே அசைவ உணவுகளை வாங்கி வைத்துக் கொண்டனர்.
அதாவது ஆடு, கோழி மற்றும் மாடு ஆகியவற்றின் இறைச்சிகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, வடசேரி மற்றும் இடலாக்குடி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருவாடு வாங்கவும் மக்கள் அதிக அளவு திரண்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
பஸ் போக்குவரத்து
மேலும் இரவு 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து இல்லாததால் வெளியூர்களுக்கு செல்பவர்கள் மாலை 4 மணியளவில் இருந்தே தங்களது ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர். இதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாலை 4 மணிக்கே மூடப்பட்டன. இதனால் நெல்லை மாவட்டம் மற்றும் மதுரைக்கு சென்ற பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
டாஸ்மாக் மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. ஏராளமான வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு 
இது ஒருபுறம் இருக்க ஊரடங்கின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நள்ளிரவில் இருந்தே மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் சுமார் 800 போலீசார் 100 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
அதோடு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும், மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்