இன்று முழு ஊரடங்கு எதிரொலி: திருச்சியில் காய்கறி, மீன், இறைச்சி வாங்க சமூக விலகல் இன்றி குவிந்த பொதுமக்கள்

இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக திருச்சி மார்க்கெட்டுகளில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி வாங்க பொதுமக்கள் சமூக விலகல் இன்றி குவிந்தனர்.

Update: 2021-04-24 19:29 GMT

திருச்சி, 
இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக திருச்சி மார்க்கெட்டுகளில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி வாங்க பொதுமக்கள் சமூக விலகல் இன்றி குவிந்தனர்.

இன்று முழு ஊரடங்கு

கொரோனா 2-வது அலை தொற்று வேகமாக பரவி வருவதால்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை 24 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இன்று காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. 
எனவே, முன்கூட்டியே அவற்றை வாங்கி வைக்கும் நோக்கில் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் அதிகமான பொதுமக்கள் திரண்டு வந்து தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். 

பெரும்பாலும் பொதுமக்கள் முககவசங்கள் அணிந்திருந்ததை பார்க்க முடிந்தது. அதே வேளையில் அங்கு சமூக விலகல் இடைவெளி என்பது காணாமல் போயிருந்தது. இதுபோல உறையூரில் உள்ள காய்கறி சந்தையிலும், உழவர் சந்தைகளிலும் நேற்று வழக்கத்தை விட மக்கள் அதிக அளவில் கூடி இருந்ததை காணமுடிந்தது. திருச்சி பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி மற்றும் சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மற்றும் வீட்டுக்கு தேவையானபொருட்கள் வாங்க மக்கள் வாகனங்களில் வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், அங்கு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

மீன், இறைச்சி விற்பனை

திருச்சி உறையூர் காசிவிளங்கி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கும் நேற்று மீன்கள் வாங்க பொதுமக்கள் சமூக விலகல் இன்றி அதிக அளவில் கூடினர். மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இன்று முழு ஊரடங்கு காரணமாக நேற்று வழக்கத்தை விட இருமடங்கு மீன்கள் விற்பனை ஆனதாகவும் தினமும் ரூ.50 லட்சம் வரையிலும் மீன் விற்பனை வருவாய் இருக்கும். ஆனால், நேற்று மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் மீன் விற்பனை ஆனதாக மீன் வியாபாரி ஜக்காரியா தெரிவித்தார். வஞ்சரம் மீன் கிலோ ரூ.650, விளா மீன் ரூ.350, பாறை மீன் 150, சங்கரா ரூ.250, நண்டு ரூ.250, இறால் ரூ.350 என விற்பனை ஆனது. ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளையும் பொதுமக்கள் நேற்று வாங்கி அவற்றை பிரிட்ஜ்-ல் வைத்து இன்று சமைத்து சாப்பிட வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்