புழுக்களுடன் குடிநீர் வினியோகம்

மாநகராட்சி குழாயில் புழுக்களுடன் குடிநீர் வினியோகம்

Update: 2021-04-24 19:24 GMT
மதுரை, ஏப்
மதுரை மாநகராட்சி 51-வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த செய்யது என்பவர் கூறும்போது, மாநகராட்சி தரப்பில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அன்றாட பயன்பாட்டுக்கு இந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து தரப்பினராலும், விலை கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்த முடியாது. இந்த நிலையில், மாநகராட்சி வினியோகிக்கும் தண்ணீரில் புழுவும் சேர்ந்து வருகிறது. நல்ல தண்ணீரில் உள்ள புழுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும், புழுவுடன் வரும் தண்ணீரை சமைக்க, குடிக்க பயன்படுத்த முடியாது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

மேலும் செய்திகள்