அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம்

சித்திரைத்திருவிழாவையொட்டி அபிராமி அம்மன்-பத்மகிரீசுவருக்கு திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2021-04-24 16:49 GMT
முருகபவனம்:

அபிராமி அம்மன் கோவில்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 இதையொட்டி அன்று ரிஷப ஹோமம், கொடிமரத்திற்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, நந்தி வரையப்பட்ட வெண்கொடி கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் தொற்று காரணமாக கொடியேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பஞ்சமூர்த்திகள் உள் புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை 6 மணியளவில் நடந்தது. 

தேரோட்டம் ரத்து

இதையொட்டி அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரர் மணக்கோலத்தில், மணமேடையில் எழுந்தருளல் நடந்தது. அதன்பிறகு விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு திருக் கல்யாண வைபவங்கள் தொடங்கியது. முதலில் பூணூல் அணிவித்தல், கலச பூஜை நடந்தது. 

பின்னர் மங்கள யாகம் நடைபெற்று சுவாமி மாலை மாற்றுதல், மிஞ்சி அணிவித்தல், போன்ற திருசடங்குகள் நடந்தன. பின்னர் தாரை வார்த்தல், மணமாலை அணிவித்தல் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் என்னும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 

கொரோனா பரவல் தொற்று காரணமாக திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 லட்சுமி-நாராயணப்பெருமாள்

பழனி மேற்குரத வீதியில் லட்சுமி-நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருவிழாவின் 7-ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. 
கோவிலின் வடக்கு வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட மணமேடையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து லட்சுமி-நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. 

 இதற்கிடையே திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வரதராஜபெருமாள் கோவில்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலில் பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

அதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதேபோல் பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிகாம்பிகை உடனுறை ஜோதிலிங்கேசுவரர் கோவிலிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
-----------

மேலும் செய்திகள்