மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் மூடப்பட்டது

மயிலாடுதுறை கோட்ட தபால் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் மற்றும் துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டன. அலுவலகங்களில் கிருமி நாசினி தளித்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது

Update: 2021-04-24 16:48 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கோட்ட தபால் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் மற்றும் துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டன. அலுவலகங்களில் கிருமி நாசினி தளித்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி
ஊட்டியில் இருந்து பணி மாறுதலாகி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் பணியில் சேர்ந்த தபால் கண்காணிப்பாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  
அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
தபால் நிலையம் மூடப்பட்டது
இதையடுத்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் மற்றும் அவர் பணி நிமித்தமாக ஆய்வுக்கு சென்று வந்த மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்துக்கு உட்பட்ட திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி, பாவட்டக்குடி, கீரனூர் ஆகிய தபால் நிலையங்கள் நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை முழு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 
இதையடுத்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் நேற்று கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு பூட்டப்பட்டது. இதனால் நாளை (திங்கட்கிழமை) வரை தலைமை தபால் நிலையம் திறக்கப்படாது என்றும், செவ்வாய்க்கிழமை மீண்டும் தலைமை தபால் நிலையம் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்