ஓசூர் தலைமை தபால் அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று
ஓசூர் தலைமை தபால் அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் எம்.ஜி. ரோட்டில் காந்தி சிலையருகே தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும், சேமிப்பு பணம் செலுத்துதல், பதிவு தபால், தபால்தலை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தபால் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்தநிலையில், இங்கு பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், தபால்காரர்கள் என 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் தபால் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை குறைந்துவிட்டது. இதன் காரணமாக நேற்று தபால் நிலையம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடனே வேலை செய்து வருகின்றனர். இதனிடையே, தபால் அலுவலகத்தின் உள்புறம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.