விழுப்புரம் நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 20 மருத்துவ குழுக்கள் அமைத்து தீவிர நடவடிக்கை
விழுப்புரம் நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 20 மருத்துவ குழுக்கள் அமைத்து வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் தினந்தோறும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அம்முகாம்களில் அங்கேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதோடு கொரோனா தடுப்பூசியும் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வீடு, வீடாக தடுப்பூசி செலுத்தும் பணி
மேலும் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தினந்தோறும் கண்காணிக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட 2 செவிலியர்கள், 2 ஊழியர்கள் என 4 பேர் அடங்கிய குழுவினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை கண்காணித்து உரிய ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அதுபோல் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அந்த குழுவினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் இதற்கென 20 மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டு அந்த குழுவினர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ள பொதுமக்களை கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருவதோடு கொரோனா பரிசோதனையும் செய்து வருகின்றனர்.
அதோடு கொரோனா நோயின் அதிதீவிர தாக்கத்தையும், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும்
நேற்று விழுப்புரம் கிழக்கு வி.ஜி.பி. நகர், பாண்டியன் நகர், சாலாமேடு, சிங்கப்பூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் ஜோதி, நிஷாந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர் மாதவன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இக்குழுவினர் மூலம் இதுவரை விழுப்புரம் நகரில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.