விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி சாவு மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-04-24 16:34 GMT
விக்கிரவாண்டி, 


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வேம்பி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38). தொழிலாளி. நேற்று இவர் வயலில் தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். மாலை 4 மணியளவில் திடீரென அந்த பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. 

அப்போது, முருகன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார். உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், முருகனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் செல்வம் (52).  தொழிலாளி. இவர் நேற்று மாலை 4 மணியளவில் தனது வீட்டின் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். இதில் செல்வம் மற்றும் அவரது வீட்டுக்கு  அருகே இருந்த சக்திவேல் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கியது.

உடனடியாக செல்வத்தை மீட்டு அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மின்னல் தாக்கியதில் தென்னைமரம் தீ பற்றி எரிந்தது. 

மேலும் செய்திகள்