முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள்
தூத்துக்குடியில் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடியில் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
விழிப்புணர்வு முகாம்
கொரோனா தொற்று 2-வது அலை பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் 2-வது கட்டமாக தீவிரமாக பரவி வருவதை தடுத்திடும் பொருட்டு தமிழக அரசானது தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதோடு பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாடுவதை தடுத்திட இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கினை அமல்படுத்திட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
எனவே பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய பணிகளான பால், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படுகிறது.
அதுபோல் முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்ளுக்கு மிகாமல் கலந்துகொள்வதில் எந்த விதமான தடையுமில்லை. ஆனால் முழு ஊரடங்கு நாட்களில் திருமண நிகழச்சிகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக திருமண அழைப்பிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
முக கவசம் கட்டாயம்
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்துகடைகளும் செயல்பட அனுமதிக்கபடமாட்டாது. தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள், வணிகர்கள் உட்பட அனைவரும் தவறாமல் கடைபிடித்திடவேண்டும்.
மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியும்போது சிலர் பெயரளவுக்கு முகக்கவசத்தை போட்டுள்ளனர். சிலர் வாய்க்கு மட்டும் போட்டுள்ளனர். அவ்வாறு போட்டு பயனில்லை. இந்த நோய் 90 சதவீதம் மூக்கு வழியாகத்தான் வேகமாக பரவுகிறது. ஆகவே உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முக கவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களில் குறிப்பிட்டபடி சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்கவேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யவேண்டும். கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள், முத்துகணேஷ், வெங்கடேஷ், ஞானராஜ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.