இதுவரை இல்லாத புதிய உச்சமாக 1004 பேருக்கு கொரோனா
இதுவரை இல்லாத புதிய உச்சமாக 1004 பேருக்கு கொரோனா
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 4,083 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று புதிதாக மாவட்டத்தில் 1004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 174-ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர, நேற்று ஒரே நாளில் 403 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 24-ஆக உயர்ந்தது. மேலும், தற்போது கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 437 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 58 வயது ஆண், 32 வயது பெண் மற்றும் 57 வயது ஆண் உள்பட 3 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 713-ஆக உயர்ந்தது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், " மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை அடுத்து முதல் முறையாக கோவையில் ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அலட்சியமாக இருக்க வேண்டாம் " என்றனர்.