கொரோனா விழிப்புணர்வு முகாம்
பனைக்குளம் அரசு மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பனைக்குளம்,
பனைக்குளம் அரசு மருத்துவமனை, அழகன்குளம் ஊராட்சி மன்றம் மற்றும் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் சார்பில் ஆரோக்கிய திட்டம், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை பனைக்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் ஸ்ரீமுக நாகலிங்கம் தொடங்கி வைத்தார். ஆரோக்கிய திட்டத்தின் மூலம் நமது உடலை இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சித்தமருத்துவ பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் மருந்துகள், சத்துமிக்க பருப்பு, பயிறு வகைகள், நவதானியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை தனிநபர்கள் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் மக்களுக்கு விளக்கப்பட்டது. பொதுமக்கள் கொரோனா தொற்று அறிகுறிகளை முன்னே கண்டறிவதற்கு காய்ச்சல் அறிகுறி, அதீத உடல் வலி, மனச்சோர்வு, அதீத வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் எனவும், கொரோனா பாதுகாப்பு மையங்களை அணுகுமாறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.