கொரோனா கட்டுப்பாடு; எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

கொரோனா கட்டுப்பாடு விதிகளையொட்டி எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமானது.

Update: 2021-04-24 13:26 GMT
எட்டயபுரம், ஏப்:
கொரோனா கட்டுப்பாடு காரணமாக எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

எட்டயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையில் ஆட்டுச்சந்தை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வாங்கி செல்வது வழக்கம். வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனை இங்கு அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக கோவில் திருவிழாக்கள் ரத்து, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்களுக்கு கட்டுப்பாடு விதித்து இருப்பதாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவித்து இருப்பதாலும் ஆடுகள் விற்பனையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

விற்பனை மந்தம்

வழக்கமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் வெளியூரில் இருந்து வியாபாரிகள் எட்டயபுரத்தில் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் இரவு நேர ஊரடங்கு இருப்பதால் நேற்று முன்தினம் இரவு வெளியூர் வியாபாரிகள் குறைவாக வந்திருந்தனர். நேற்று அதிகாலையில் இருந்து உள்ளுர் வியாபாரிகள் தான் அதிகமாக இருந்தனர். வெளியூர் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர். வழக்கமான கூட்டத்தினை விட குறைவாக காணப்பட்டது மட்டுமின்றி ஆடுகள் விற்பனையும் மந்தமாக இருந்தது.

முக கவம் அணிந்து இருந்தவர்கள் மட்டுமே ஆட்டு சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் உள்ளே வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஆட்டுச்சந்தை கொரோனா கட்டுப்பாடு காரணமாக நேற்று களையிழந்து காணப்பட்டது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையில் அதிகளவு இறைச்சி விற்பனை இருக்கும் என்பதால் எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆடுகள் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது.

மேலும் செய்திகள்