முழு ஊடரங்கை முன்னிட்டு காய்கறி, மளிகை கடைகளில் குவிந்த பொதுமக்கள்
முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் காய்கறி, மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி, ஏப்:
முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று இரவு 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று இறைச்சிக்கடை, மீன் கடை, காய்கறி கடைகள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
கூட்டம் அலைமோதியது
இதனால் பொதுமக்கள் நேற்று மளிகை, காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்க குவிந்தனர். இன்று ஒரு நாளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் காய்கறி மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட், காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை, மற்றும் வ.உ.சி. கல்லூரி அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேற்று காய்கறி மார்க்கெட்டில் கத்தரிக்காய் ரூ.20 ஆகவும், தக்காளி ரூ.10 ஆகவும், கேரட் ரூ.30 ஆகவும், பீன்ஸ் ரூ.60 ஆகவும், அவரை ரூ.60 ஆகவும், இஞ்சி ரூ.35 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.20 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.50 ஆகவும், முருங்கைக்காய் ரூ.50 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.25 ஆகவும் சீனி அவரைக்காய் ரூ.20 ஆகவும், சேனைக்கிழங்கு ரூ.25 ஆகவும், மிளகாய் ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்கப்பட்டது.
காய்கறி மார்க்கெட்டில் நேற்று புதினா மற்றும் கொத்தமல்லி இலை விலை அதிகமாக இருந்தது. புதினா ஒரு கட்டு ரூ.100 ஆகவும், கொத்தமல்லி இலை ரூ.150 முதல் ரூ.200 வரையும் விற்பனையானது.
இறைச்சி கடையிலும்...
இதேபோல் நேற்று இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
நேற்று இரவு வரை மீன் கடை மற்றும் இறைச்சி கடைகளில் விற்பனை நடந்தது.
மேலும் டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்படுவதால் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மது பிரியர்கள் நேற்று அதிகமாக வாங்கி சென்றனர்.