ஆக்சிஜன், தடுப்பூசி தேவை பிரதமர் மோடியிடம், உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மராட்டியத்தில் கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும், ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2021-04-24 05:52 GMT
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. வேகமாக பரவுவது மட்டும் அன்றி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.

இந்தநிலையில் அதிகப்படியான பாதிப்பு காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஆக்சிஜன், படுக்கை வசதி மற்றும் மருந்துகள் இருப்பு இன்றி அரசு அல்லாடி வருகிறது.

இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று கொரோனா அதிகம் பாதித்த மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்து பேசியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினமும் 1,550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதில் 300 முதல் 350 மெட்ரிக் டன் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கப்படுகிறது.

எனவே தொலைதூர மாநிலங்களுக்கு பதிலாக அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் நேர விரயம் தவிர்க்கப்படும்.

ஆக்சிஜன் டேங்கர்களை விமானத்தில் கொண்டு வருவது சாத்தியமற்றது என்றால் போக்குவரத்து நேரத்தை மிச்சப்படுத்த காலி ஆக்சிஜன் டேங்கர்களை மீண்டும் ஆக்சிஜன் நிரப்பும் ஆலைகளுக்கு கொண்டுசெல்லவாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரெம்டெசிவிர் மருந்து எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் இது ஆஸ்பத்திரி சிகிச்சை காலத்தை நிச்சயமாக குறைக்கிறது.

நோயாளிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ரெம்டெசிவிர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மராட்டியத்திற்கு தினமும் 70 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் தேவைப்படுகிறது. ஆனால் வெறும் 27 ஆயிரம் டோஸ் மருந்துகள் மட்டுமே கிடைக்கிறது. எனவே இந்த மருந்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவேண்டும்.

தற்போது மராட்டியத்தில் சுமார் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது.

மராட்டியத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்ட 5.17 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு செலுத்த எங்களுக்கு 12 கோடி டோஸ் தேவைப்படும்.

நமது தடுப்பூசி உற்பத்தியாளர்களால் குறுகிய காலத்திற்குள் இவ்வளவு மருந்தை தயாரிக்க முடியாது. எனவே கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு கடமையின் கீழ் தங்களை தடுப்பூசி வாங்க அனுமதிக்க வேண்டும்.

அதேபோல மத்திய அரசு மராட்டிய மாநிலத்திற்கு 13 ஆயிரம் மெகா ஆக்சிஜன் சிலிண்டர்களையும், 1,100 வென்டிலேட்டர்களையும் வழங்கவேண்டும். இவ்வாறு முதல்-மந்திரி கூறினார்.

மேலும் செய்திகள்