இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-04-23 23:11 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனை, 13 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
1 லட்சத்து 11 ஆயிரம் பேர்
இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 13 ஆயிரத்து 920 கோவிஷீல்டு தடுப்பூசி திருப்பூருக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இது பிரித்து அனுப்பப்பட்டது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி சென்றனர். தற்போது வரை மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்