அமராவதி ஆற்றில் ஆபத்தான முறையில் நீச்சல் போட்டி நடத்தும் சிறுவர்கள்
கொழுமம் அமராவதி ஆற்றில் ஆபத்தான முறையில் நீச்சல் போட்டி நடத்தும் சிறுவர்களை கண்காணிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடிப்பட்டி
கொழுமம் அமராவதி ஆற்றில் ஆபத்தான முறையில் நீச்சல் போட்டி நடத்தும் சிறுவர்களை கண்காணிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர்த்திட்டங்கள்
அமராவதி அணையிலிருந்து தொடங்கும் அமராவதி ஆறு கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், கடத்தூர் உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் மூலம் நூற்றுக்கணக்கான குடிநீர்த்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் ஆயக்கட்டு பாசனம் மூலம் நேரடியாகவும், நிலத்தடி நீராதார மேம்பாடு மூலம் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனத்துக்கு உதவி வருகிறது.
தற்போது அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆற்றில் குளிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தநிலையில் கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் குளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீச்சல் போட்டி
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது
தற்போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பெற்றோர் அல்லது உறவினர் யார் துணையும் இல்லாமல் நண்பர்களுடன் இணைந்து அமராவதி ஆற்றில் குளிக்க வருகின்றனர்.
அப்போது அவர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று ஆபத்தான முறையில் குளிப்பதுடன் நீச்சல் போட்டியும் நடத்துகின்றனர். ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு நீந்திக் கடப்பது, ஆற்றின் நடுவிலுள்ள பாறையிலிருந்து கரையை அடைவது என்று விதம் விதமாக நீச்சல் போட்டி நடத்துகிறார்கள்.
தற்போது ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் நிலையில் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
எனவே அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கண்காணித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும். இதுபோல அமராவதி பிரதான கால்வாயிலும் சிறுவர்கள் ஆபத்தான முறையில் மேலிருந்து குதித்து நீச்சலடித்து விளையாடி வருகின்றனர்.
எனவே பெற்றோர்கள் சிறுவர்களை தனியாக குளிக்க அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.