இளம்பிள்ளை அருகே விசைத்தறி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை
விசைத்தறி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை
இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே மகன் திருமணத்துக்கு மறுத்ததால், விசைத்தறி உரிமையாளர் தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விசைத்தறி உரிமையாளர்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள புளியம்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 59). விசைத்தறி உரிமையாளர். இவர் வீட்டிலேயே சொந்தமாக 2 விசைத்தறி வைத்து தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ரத்தினம் (48). இவர்களுக்கு ராஜா அண்ணாமலை (25) என்ற மகனும், சுகன்யா உள்பட 2 மகள்களும் உள்ளனர்.
இதில் 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் ராஜா அண்ணாமலை எம்.பி.ஏ. படித்து விட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ராஜா அண்ணாமலைக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் (மே) நடைபெறுவதாக இருந்தது.
பெண் பிடிக்கவில்லை
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜா அண்ணாமலை தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பிடிக்கவில்லை என்றும், திருமணம் வேண்டாம் என்றும் தந்தை தங்கமணியிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் திருமணம் சம்பந்தமாக தங்கமணி, தனது மகனிடம் பேசி உள்ளார். அப்போதும் அவர், அந்த பெண்ணை பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு மகனும், தந்தை வீட்டுக்கு வந்திருந்த மகள் சுகன்யாவும் வீட்டின் மேல் மாடியில் தூங்கச்சென்றனர். கீழே உள்ள விசைத்தறி கூடத்தில் தங்கமணியும், மனைவி ரத்தினமும் தூங்கினார்கள்.
தற்கொலை
பின்னர் நேற்று காலை விசைத்தறி கூடத்தில் தங்கமணி, ரத்தினம் ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து, மகள் சுகன்யா அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் கதறி அழுதார். உடனடியாக மகுடஞ்சாவடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் திருமணத்துக்கு மறுத்ததால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.