சேலத்தில் பயங்கரம் சாப்பாடு கொடுக்காததால் மனைவி குத்திக்கொலை கணவர் வெறிச்செயல்
மனைவி குத்திக்கொலை
சேலம்:
சேலத்தில் சாப்பாடு கொடுக்காததால் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மளிகை கடைக்காரர்
சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள வர்மா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 63). இவருடைய மனைவி கல்பனா (59). இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாஸ்கரன் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இந்த கடை செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் வீட்டில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து கல்பனாவின் வயிறு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். மேலும் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் பலத்த காயம் அடைந்த கல்பனா ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பரபரப்பு வாக்குமூலம்
பின்னர் பாஸ்கரன் போலீஸ் அவசர எண் 100-க்கு போன் செய்து, நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கூறிவிட்டு, தூக்குப்ேபாட்டு தற்கொலைக்கு முயன்றார். அந்த நேரத்தில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன், வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாஸ்கரனை காப்பாற்றினர்.
இதைத்தொடர்ந்து கல்பனாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பாஸ்கரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
சாப்பாடு கொடுக்கவில்லை
பாஸ்கரன் கடந்த பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வந்து உள்ளார். அப்போது அவர் 2 வீடுகளை கட்டி உள்ளார். அந்த 2 வீட்டையும் பாஸ்கரன், கல்பனாவின் பெயருக்கு எழுதிக் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாட்களாக பாஸ்கரன் வீட்டின் மேல் மாடியில் தனியாக இருந்து உள்ளார். கல்பனா தனி அறையில் தங்கி உள்ளார். மேலும் பாஸ்கரனுக்கு அவர் சரியாக உணவு வழங்காமல் இருந்து உள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக கல்பனா தனது கணவர் பாஸ்கரனுக்கு உணவு எதுவும் சமைத்து கொடுக்கவில்லை. இதனால் பாஸ்கரன் மேலும் கோபத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் சாப்பாடு கேட்டு உள்ளார். அப்போது கல்பனா சாப்பாடு எதுவும் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கல்பனாவை குத்திக்கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சாப்பாடு கொடுக்காததால் மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.