தென்காசியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
தென்காசியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தென்காசி:
தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனால் முன்பு இருந்ததை விட அதிகமான அளவில் கொரோனா பரவுகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய 4 துறைகளும் ஒருங்கிணைந்து தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறையினர் தென்காசி நகரில் ஆங்காங்கே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். தென்காசி நகரசபை ஆணையாளர் பாரிஜாண் தலைமையில் சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவா, கைலாச சுந்தரம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தென்காசியில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.
கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கூடுமானவரை வீட்டை விட்டு வெளியே வராமலும் அதிகமாக கூட்டம் சேராமலும் இருக்க வேண்டும், கண்டிப்பாக அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.