பணி முடிந்தும் பணம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்ததாரர் உண்ணாவிரதம் ஈரோட்டில் பரபரப்பு

பணி முடிந்தும் பணம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஈரோட்டில் ஒப்பந்ததாரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-23 20:42 GMT
பணி முடிந்தும் பணம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஈரோட்டில் ஒப்பந்ததாரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பராமரிப்பு பணி
ஈரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 41) இவர் ரெயில்வே பணி ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில்வே பயிற்சி விடுதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கு டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டார். பயிற்சி விடுதியில் உள்ள கழிப்பறைகள் புதுப்பித்தல், தரைத்தளம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை செய்தார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தப்படி அனைத்து பணிகளையும் முடித்துவிட்டார். இதற்காக ரூ.65 லட்சம் மட்டும் ரெயில்வே நிர்வாகம் கொடுத்துள்ளது. மீதமுள்ள ரூ.60 லட்சத்தை ரெயில்வே நிர்வாகம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளது.
போர்வை-தலையணை
மீதமுள்ள பணத்தை வழங்கக்கோரி பல முறை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகத்திடம் கேட்டும் ரெயில்வே அதிகாரிகள் முறையாக பதிலளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமலும், தனது குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தை கட்ட முடியாமலும் துரைக்கண்ணு அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை தனது வீட்டில் இருந்து போர்வை, தலையணை படுக்கையுடன் புறப்பட்ட துரைக்கண்ணு ஈரோடு ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடை பகுதிக்கு சென்று அங்குள்ள பயணிகள் இருக்கை அருகில் படுத்துக்கொண்டார்.
உண்ணாவிரத போராட்டம்
ரெயில்வே நிர்வாகம் நிலுவை பணத்தை கொடுத்தால் மட்டுமே வீட்டிற்கு செல்வேன் என்றும், அதுவரை ரெயில் நிலையத்திலேயே படுத்துக்கொள்வேன் என்றும் கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று துரைக்கண்ணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பவம் நடந்தது திருச்சி ரெயில்வே கோட்டம் என்பதால் அங்கு சென்று முறையிடுங்கள் என்று ரெயில்வே போலீசார் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த துரைக்கண்ணு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்