இந்தியாவில் இருந்து வர ஐக்கிய அரபு அமீரகம் தடை: திருச்சியில் இருந்து விமான சேவை நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
இந்தியாவில் இருந்து வர ஐக்கிய அரபு அமீரகம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் இருந்து இன்று நள்ளிரவு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
செம்பட்டு,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி இருப்பதால், ஒவ்வொரு நாடும் இந்தியா மீது பயண தடை விதித்து வருகின்றன. இங்கிலாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகமும் தடை விதித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருந்து யாரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரக்கூடாது. கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணம் செய்தவர்களும் எந்த நாட்டில் இருந்தும் அமீரகத்துக்கு விமானம் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை இன்று (சனிக்கிழமை) இரவு 11.59 மணிக்கு அமலுக்கு வருகிறது. அடுத்த 10 நாட்களுக்கு அமலில் இருக்கும். பின்னர், அப்போதைய சூழ்நிலைக்கேற்ப ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று நள்ளிரவு முதல் திருச்சியில் இருந்து இயக்கப்பட இருந்த விமான சேவைகள் 10 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.