பாப்பாக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்தது; 2 பேர் உடல் கருகி சாவு
பாப்பாக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே கபாலிபாறை பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற துரை (வயது 41). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அம்பையில் உள்ள தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இதற்கிடையே ஆலங்குளம் அருகே சிவலார்குளம் பகுதியைச் சேர்ந்த நெல் அறுவடை எந்திர உரிமையாளரான சிவகுமார் என்ற சேகர் (45), அவருடைய நண்பரான இடைகால் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் முத்துபதியுடன் மோட்டார் சைக்கிளில் பாப்பாக்குடி அருகே இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.
பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் சென்றபோது, இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட துரை, சிவகுமார், முத்துபதி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் வெளியே சிதறியதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் தீப்பிடித்து எரிந்தது. இதில் படுகாயமடைந்த துரை, சிவகுமார், முத்துபதி ஆகியோர் மீதும் தீப்பிடித்தது. இதனால் உடல் கருகிய அவர்கள் அலறி துடித்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயம் அடைந்த சிவகுமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், துரையை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிவகுமார் பரிதாபமாக இறந்தார். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் துைரக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முத்துபதிக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.