திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்; ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

கொரோனா 2-வது அலை எதிரொலியாக திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு வடமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு சென்றனர். இதனால் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-04-23 20:09 GMT
திருச்சி, 

கொரோனா 2-வது அலை எதிரொலியாக திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு வடமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு சென்றனர். இதனால் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்

தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாவட்டங்களில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதும், இதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கும் வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக நேற்று திருச்சி ரெயில் நிலையத்தில் திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக மூட்டை முடிச்சுகளுடன் குவிந்தனர்.

நிரம்பி வழிந்த கூட்டம்

தாங்கள் வீட்டு உபயோக பொருட்களான அண்டா, பேரல், கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் உடைமைகளுடன் குடும்பத்துடன் வந்திருந்தனர். இதனால் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரம் நிரம்பி வழிந்தது.
பின்னர் பிறபகல் 1.40 மணிக்கு புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

வேலை இழப்பு

இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், ‘மேற்கு வங்காளம், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்து வருகிறோம். தற்போது கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருப்பதால் வேலை முழுமையாக கிடைப்பதில்லை. எனவே, சொந்த ஊரில் இருந்து விட்டு கொரோனா அச்சம் குறைந்ததும் மீண்டும் பணிக்கு திரும்புவோம்' என்றனர்.

மேலும் செய்திகள்